மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனத்தில் (சிபிசிஎல்), குரூப் -II / குரூப் -III லூப் ஆயில் பேஸ் ஸ்டாக் (LOBS) திட்டத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த திட்டத்துக்காக ரூ.1,620 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 2.56 லட்சம் டன் உயர்தர அடிப்படை மசகு எண்ணெய் உற்பத்தி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் புதிய Catalytic Dewaxing Unit அமைக்கப்படுவதுடன், ஏற்கெனவே உள்ள உற்பத்திப் பிரிவிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. திட்டத்துக்கான கால அளவு 31 மாதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்தர மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதுடன், இறக்குமதிச் சார்பைக் குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடியில் 3 மெகாவாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மின்னாற்பகுப்பு உற்பத்தி நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பீடு ரூ.81.33 கோடியாகும். இதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவித்து, துறைமுகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் கட்டமைப்பை மேம்படுத்துவது நோக்கமாகும்.